Thursday, January 20, 2011

சிராவகர் அல்லது சாவகர்

சிராவகர் யார்?

சிலப்பதிகாரத்தில் வரும் “சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்” என்ற
வரியில் வரும்
”சாவக” என்ற சொல்லுக்கு பொருள் யாது என்பது தான் இங்கு (மின்தமிழ் குழுமம்)
விவாதிக்கப்பட்டு வருகிறது. சிராவகர் என்ற வடமொழிச் சொல் தமிழிலும்,
பிராகிருதத்திலும் சாவகர் என்று வரும். சாவகர் என்பது சமண
இல்லறத்தார்களைக் குறிக்கும். அதே சமயம், பெளத்த நூல்களில் அந்த
சொல் பெளத்த முனிவர்களைக் குறிக்கப் பயன்படுவதுண்டு. இடத்திற்கேற்றாற்
போல் பொருள் கொள்ளவேண்டும். என்னை? :-)

ஜைன துறவறத்தார் சிரமணர் அல்லது சமணர் என்று அழைக்கப்படுவர்.
(சமணர் என்றால் ஆசிவகரையும் குறிக்கும் என்று சில ‘அறிஞர்கள்”
கூறுவதுண்டு. அது பொருந்தாது. ஆதாரத்துடன் நிறுவ முடியும். பிறகு
ஒரு நாளில் இங்கு எழுதுவேன்) ஜைன இல்லறத்தார் சிராவகர் அல்லது
சாவகர். சமணர் ஏற்பது மகாவிரதம். சிராவகர் ஏற்பது அணுவிரதம்.
விரதம் இருவருக்கும் பெயரளவில் ஒன்றே ஆனாலும் அவற்றின்
“Magnitude” ல் சிறிய வேறுபாடுண்டு.

சாவக தர்மம் மனையறம் என்று அழைக்கப்படுவது போல், சாவகர்களை
இல்லற நோன்பிகள், உலக நோன்பிகள், இல்லற விரதிகள் போன்ற
சொற்களாலும் அழைக்கப்படுகிறார்கள்.

விரதம் அல்லது நோன்பு

சிராவகர்கள் ஒழுகவேண்டிய விரதங்கள் பத்தாம். அவற்றுள் முதல்
ஐந்தும் ”அணுவிரதம்” என்றழைப்படும். இந்த அணுவிரதத்தை
அனைத்து சமண இல்லறத்தார்களும் கடைப்பிடிக்கவேண்டும் என்று
சமணம் சொல்லும்.

1. கொல்லாமை (ஓரறிவு உயிர்கள் விலக்கு)
2. பொய்யாமை
3. கள்ளாமை
4. பிறன்மனை விரும்பாமை
5. மிகுபொருள் விரும்பாமை

(இவைகள் அணுவிரதம் என்றழைக்கப்படும்)

6. ஊன் உண்ணாமை
7. கள் உண்ணாமை
8. தேன் உண்ணாமை
9. இரவு உண்ணாமை
10. குரவரை இகழாமை

இவற்றை திருக்கலம்பகம் என்ற நூல் அழகாகத்
தொகுத்துரைக்கும்.

“விரையார் மலர்மிசை வருவார் திருவறம்
விழைவார், கொலையினை விழையார்; பொய்
உரையார்; களவினை ஒழுகார்; பிறர்மனை
உவவார்; மிகுபொருள் உவவார்; வெம்
கரையால் உணர்வினை அழியார்; அழிதசை
துவ்வார்; விடமென வெவ்வாறும்
புரையார்; நறவினை நுகரார்; இரவுணல்
புகழார்; குரவரை இகழாரே” – திருக்கலம்பகம் (67)

அணுவிரத்தை அருங்கலச் செப்பு என்ற நூல்,

“பெரிய கொலை, பொய், களவொடு, காமம்
பொருளை வரைதலோடு ஐந்து” – அருங்கலச் செப்பு (66)

மேற்சொன்ன விரதங்களை கடைப்பிடிக்கவேண்டியது சாவகரின்
(இல்லறத்தார்) கடமை. எல்லாவற்றையும் கடைப்பிடித்தே ஆக
வேண்டும் என்று சமணம் எப்போதும் வற்புறுத்தியதில்லை.
தாங்கள், தங்கள் சக்திக்கு ஏற்ப முழு மனத்தோடுக்
கடைப்பிடிக்கவேண்டும் என்று தான் சமணம் சொல்கிறது.



இரா.பா,
சென்னை

5 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சிறப்பான தகவல்! நன்றி பானுகுமார்!

//தேன் உண்ணாமை//
தேனீக்கள் அழியும் என்பதாலா?

//9. இரவு உண்ணாமை//
ஏன்? பூச்சி பொட்டு விழும் என்பதாலா?

//10. குரவரை இகழாமை//
குரவு = வறுமை??

//மேற்சொன்ன விரதங்களை கடைப்பிடிக்கவேண்டியது சாவகரின்
(இல்லறத்தார்) கடமை// //எல்லாவற்றையும் கடைப்பிடித்தே ஆக
வேண்டும் என்று சமணம் எப்போதும் வற்புறுத்தியதில்லை//

உம்...
கடமை என்றும் சொல்கிறீர்கள்!
அப்படின்னா கடைப்பிடிக்காத பட்சத்தில், "கடமை தவறியதாக" ஆகும் அல்லவா? - அப்பறம் எப்படி வற்புறுத்தியதில்லை என்றும் சொல்கிறீர்கள்?

Banukumar said...

//குரவு = வறுமை??//

குரவர் = முனிவர், ஆச்சாரியார், குரு போன்றோர்களைக் குறிக்கும்.

//உம்...
கடமை என்றும் சொல்கிறீர்கள்!
அப்படின்னா கடைப்பிடிக்காத பட்சத்தில், "கடமை தவறியதாக" ஆகும் அல்லவா? - அப்பறம் எப்படி வற்புறுத்தியதில்லை என்றும் சொல்கிறீர்கள்?//

நான் சரியாக விளக்கவில்லை என்று தெரிகிறது. முதல் ஐந்தையும் போற்றுதல் கடமை. மற்ற ஐந்தையும் தன் தகுதிக்கு ஏற்றோர் போல் கடைப்பிடிக்கலாம். காட்டாக,
என்னால் இரவு உண்ணாமையை சரியாக கடைப்பிடிக்க முடியவில்லை என்றால் வாரத்தில் இரண்டு நாளோ அல்லது நான்கு நாளோ கடைப்பிடிக்கலாம் என்பதை சொல்லவே அவ்வாறு எழுதினேன்.

இரா.பா,
சென்னை.

NICHAAMAM said...

இலங்கையின் வடபாகத்தே சாவகச்சேரி எனும் சிறப்பான நகரம் உள்ளது.

தங்கள் விளக்கம் இதற்குப் புதிய வெளிச்சத்தைக் கொடுக்கிறது, நன்றி

NICHAAMAM said...

www.nichamam.com

NICHAAMAM said...

சாவகச்சேரிக்கு யாவா தேசத்திலிருந்து வந்தவர்கள் என நாம் இதுவரை பொருள்கண்டுவந்திருக்கிறோம்.
அது தவறு ,தங்கள் விளக்கப்படி சமண அல்லது பெளத்த குடியிருப்புகள்தான் அதற்குப் பொருத்தமாயிருக்கும்